டீ-யில் விஷம் கலந்து தாயை கொன்ற மகள்… கூகுளில் ஐடியா தேடியதால் வசமாக சிக்கினார்

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கீழ்குளம் பகுதியில் வசிக்கும் சாதாரண ஒரு குடும்பம். அந்த குடும்பத்தில் சந்திரன்- ருக்மணி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் இந்துலேகா, இவருடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதனால் தந்தை தாயுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்துலேகா, கணவருக்கு தெரியாமல் நகைகள் அடகு வைத்து 8 லட்சத்திற்கும் மேலாக கடன் வைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்துலேகாவின் தாய் 17-ம் தேதி திடீரென மஞ்சள் காமாலை அறிகுறிகளுடன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடலில் விஷம் சென்றிருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

உடலில் விஷம் கலந்தது எப்படி?

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் 23ஆம் தேதி ருக்மணி உயிரிழந்துள்ளார். மருத்துவர்கள் தங்களது சந்தேகத்தை குறித்து குன்னுங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் எலி விஷ மருந்து காரணமாக ருக்மணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

இதைத் தொடர்ந்து குன்னங்குளம் போலீசார் குடும்பத்தாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். எதுவும் தெரியாதது போல் நாடகமாடி வந்துள்ளார் இந்துலேகா. இந்துலேகாவின் தாய் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு அவரது கணவரும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். போலீசாரின் விசாரணையில் இந்துலேகாவுக்கு 8 லட்ச ரூபாய் கடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.

எனவே ஒரு சில சந்தேகங்கள் இந்துலேகாவிடம் இருந்ததால் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதில் இந்துலேகா தனது தாயிடம் பலமுறை அவர்கள் தங்கியிருக்கும் 14 செண்டு இடமும் அதில் உள்ள வீட்டையும் தன் பெயரில் மாற்றித்தர வற்புறுத்தியுள்ளார். ஆனால் தாய் நாங்கள் இறந்த பிறகு தான் இந்த சொத்து பிரிக்கப்படும் என உறுதியாக கூறியுள்ளார் என்பதும் தெரியவந்தது. தனது கணவனுக்கு நகைகள் அடகு வைத்து 8 லட்சம் ரூபாய் வாங்கியது தெரிய வருமோ?தன் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுமோ ?என்ற பயத்தில் தாயை கொன்றிருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது போலீசாரின் எந்த விசாரணைக்கும் அசராமல் இருந்துள்ளார் இந்துலேகா. பின்பு அவரது செல்போனை வாங்கி விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். அப்போது அவரது மொபைலில் மெதுவாக கொல்வது எப்படி? பிடிபடாமல் கொல்வது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன ?என்பதை கூகுளில் தேடி வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது பதில் கூற தெரியாமல் திணறியுள்ளார். பின்னர் போலீசாரின் கிடக்குப்பிடி விசாரணையின் போது வேறு வழியில்லாமல் தாய் தந்தைக்கு டீ- ல் விஷம் கொடுத்து வந்ததும் அவர்கள் சாப்பிட்டு வந்த சாப்பாடுகளில் மாத்திரைகள் கலந்து வந்ததும் அவர் ஒப்புக்கொண்டார். சந்தேகத்தால் மகள் கொடுத்த டீ -யை குடிக்காததால் தந்தை சந்திரன் உயிர் தப்பி உள்ளார்.

தன் மகளை நம்பி உணவை உட்கொண்ட அவரது தாய் உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நேரில் அழைத்துச் சென்று எலி விஷம் வாங்கிய கடை உட்பட விஷம் கலக்க பயன்படுத்திய பாத்திரங்களையும் ஆவணங்களாக எடுத்துள்ளனர். தொடர்ந்து தாயைக் கொன்ற கொடூர மகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தி காட்டு தீ போல பரவி தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.