‘இலவசங்கள்’ வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்; நிபுணர் குழுவை அமைக்கலாம் எனக் கருத்து

இலவசங்கள் தொடர்பான வழக்கை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞா் அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தது.

இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குறுதிகளைத் தடுக்க இயலாது என்றும் அதேநேரம் இலவசத்தையும், வளா்ச்சித் திட்டங்களையும் குழப்பிக்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ள உச்சநீதிமன்றம், இலவசங்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஏன் கருத்துக் கேட்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் இலவசங்கள் குறித்த விவாதம் தேவை என்றும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் வழக்கின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இலவசங்கள் குறித்த வழக்கில் மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்து ஆராயலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ள நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.