இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பா வாழ் இலங்கையர்கள் ஜெனிவாவில் போராட்டம்.

இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும், அவசரகாலச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை வளாகத்தில் புலம்பெயர் ஐரோப்பா வாழ் இலங்கையர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த காலங்களில் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராகத் தமிழ் மக்களே போராட்டம் நடத்துவது வழமை. அந்தக் காலப் பகுதிகளில் சிங்கள மக்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தும், அதன் மனித உரிமை மீறல்களை ஆதரித்தும் போராட்டம் நடத்தி வந்தனர்.

இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பாவிலுள்ள புலம்பெயர் நாடுகளில் வாழும்  அதிகளவான சிங்கள மக்கள் ஜெனிவாவில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த மாதமும் சுவிற்சர்லாந்தில் உள்ள மக்களோடு , சுவிற்சர்லாந்தை  அண்மித்த நாடுகளான பிரான்ஸ் , இத்தாலி , ஜேர்மனி மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகளில் இருந்த இலங்கையர்கள் கலந்து கொண்ட ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இப்போராட்டங்களில் அதிகமான சிங்கள மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அவர்களோடு தமிழ் , முஸ்லீம் மற்றும் பேர்கர் மக்களும் கலந்து கொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் நீதி வேண்டி , இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கையரால் , இலங்கையர் புலம் பெயர்ந்து வாழும்  நாடுகளில் பரவலாக ஆரம்பித்தன.  ஆனால்  ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கையர்கள் இணைந்து  ஐநா முற்றலில் , இலங்கை அரசுக்கு எதிராக நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவது இதுவே முதன் முறையாகும்.
இதற்கு முன் தமிழர் போராட்டங்களை  தவிர்த்து இலங்கையர் , இலங்கை அரசுகளுக்கு ஆதரவாகவே ஐநா முற்றலில் போராட்டங்களை நடத்தினர்.

இம்முறை ‘அடக்குமுறையை நிறுத்து’ என்ற தொனிப்பொருளில் இலங்கை அரசுக்கு எதிராக , இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசுக்கு எதிரான காலிமுகத்திடல் போராட்டச் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவதைக் கண்டித்தும், கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரியும் இந்தப் போராட்டத்தில் அவர்கள் கோஷம் எழுப்பினர்.ஊழல்வாதிகள் தற்போதும் அமைச்சரவையில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும், ஊழல்வாதிகள் ஆளும் கட்சியில் இன்னமும் உள்ளார்கள் என்றும், அவர்கள் தண்டிக்கப்படாமையைக் கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் சிங்கள மக்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக இத்தாலியிலிருந்தே அதிகளவானோர் பங்கேற்றனர். அவர்கள், இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் நீதி வேண்டிக் கோஷம் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.