கல்வி கற்க தகுதி வேண்டும் என கூறுவதால்தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்- முதல்வர் ஸ்டாலின்

கல்வி கற்கவே தகுதி வேண்டும் என கூறுவதால் தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்களின் மாநாடு நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அமைச்சர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர், தமிழ் நாட்டில் உயர்கல்வி சேரும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கல்வி தரம் குறைந்துவிட்டது என்பதை ஏற்க முடியாது என்றார். அனைவரும் உயர்கல்வி பயில பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நீட் தேர்வு, தேசிய கல்வி கொள்கை ஆகியவை உயர்கல்விக்கு தடையாக இருப்பதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். தமிழ் நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மாநாட்டில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதில் துணைவேந்தர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவோடு துணைவேந்தர்கள் இணைந்து தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.

மாநாட்டில் , ஆளுநர் மாளிகையில் இருந்து வரும் உத்தரவுகளை, அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று துணை வேந்தர்களுக்கு, உயர் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், எந்தவொரு விவகாரத்திலும் துணை வேந்தர்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆளுநர் மாளிகை அல்லது மத்திய அரசு அமைப்புகளான UGC, AICTE-இடம் இருந்து வரும் உத்தரவுகளை மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.