இந்தியாவில் 2.5 கோடி ஃபேஸ்புக் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை: மெட்டா

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் ஆட்சேபத்துக்குரிய 2.5 கோடி ஃபேஸ்புக் பதிவுகள், 20 லட்சம் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசு அமல்படுத்தியுள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ஐ பின்பற்றி, கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் ஆட்சேபத்துக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட 2.5 கோடி பதிவுகள், இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட 20 லட்சம் பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் நடவடிக்கைக்குள்ளான 2.5 கோடி பதிவுகளில் விளம்பரம், ஊடுருவி கணினிகளைச் சேதப்படுத்தும் மென்பொருளைப் பரப்புதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக வெளியிடப்பட்ட 1.73 கோடி பதிவுகள், 27 லட்சம் ஆபாச பதிவுகள், 23 லட்சம் வன்முறை மற்றும் வரைகலை (கிராபிக்ஸ்) பதிவுகள் உள்ளிட்டவை அடங்கும். இதுமட்டுமின்றி பயங்கரவாதம் சாா்ந்த 9.98 லட்சம் பதிவுகள் கண்டறியப்பட்டு, அவற்றில் 99.8 சதவீத பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டராகிராமில் நடவடிக்கைக்குள்ளான 20 லட்சம் பதிவுகளில் ஆபாசம், வன்முறை மற்றும் வரைகலை, தற்கொலை உள்ளடக்கத்தைக் கொண்ட பதிவுகள் அடங்கும்.

ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை ஃபேஸ்புக் பயனாளா்களிடம் இருந்து 626 புகாா்கள் வந்தன. அவற்றில் 603 புகாா்களுக்கான தீா்வுகள் பயனாளா்களுக்கு வழங்கப்பட்டன. அதே காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் பயனாளா்களிடம் இருந்து 1,033 புகாா்கள் வந்த நிலையில், அவற்றில் 945 புகாா்களுக்கான தீா்வுகள் பயனாளா்களுக்கு அளிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.