படிப்பது தேவாரம்; இடிப்பது சிவன் கோயில்! – ரெலோ – ரணில் சந்திப்பை இப்படி விமர்சிக்கின்றார் சிறிகாந்தா.

“ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் கடிதத்தில் ரெலோ கையெழுத்திட்டுவிட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலப்புப் பொறிமுறை தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளனர். இந்தப் பேச்சு தற்போதைய சூழலில் பொருத்தமற்ற – தமிழர் தரப்புக்கு பின்னடைவான ஒன்று.”

இவ்வாறு ரெலோவிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கின்றது. முதல் நாளிலேயே இலங்கை தொடர்பான தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை வாக்களித்து, இதுவரை நிறைவேற்றாத விடயங்கள் – போர்க்குற்றங்கள் தொடர்பானதே இந்தத் தீர்மானம்.

தமிழர் தரப்பு இந்த முறை பரந்துபட்ட அடிப்படையில் போரின் இறுதிக்கட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைக்குமாறு மனித உரிமைகள் பேரவையை வேண்டியுள்ளன.

இந்த வேண்டுகோளில் ரெலோ, நான் சார்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் உட்பட 6 தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதப் பெரியவர்கள், மனித உரிமைகள் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் அமைப்புக்களும் கையெழுத்திட்டுள்ளன.

இம்முறை ஜெனிவாவில் எப்படி தப்பிப்பது பற்றித்தான் அரசு தீவிரமாகச் சிந்தித்து வருகின்றது. இந்தச் சூழலில் தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் பற்றி ஜனாதிபதியுடன் பேசுவது தவறில்லை. ஆனால், பேசிய காலகட்டம் உகந்ததல்ல.

ஜனாதிபதி எதையும் செய்யவில்லை. ரெலோவுக்கு சில வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். இது அவருக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

‘தமிழர் தரப்புடன் பேசிக் கொண்டிருக்கின்றேன், அவர்கள் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள், அதனடிப்படையில் செயற்படத் தயாராக இருக்கின்றேன், அவர்களிடமும் சொல்லியுள்ளேன்’ என்று ஐ.நா.வில் இலங்கை விவகாரத்தில் ஆர்வமுள்ள இராஜதந்திரிகளிடம், ரணில் இதனை ஓர் ஆயுதமாகப் பாவிப்பார்.

அரசு நீண்டகாலமாகத் தட்டிக்கழித்து வந்துள்ள படைக்குறைப்பு, அரசியல் கைதிகள் விவகாரங்களை இவ்வளவு அவசரமாக, இந்தச் சூழலில் பேச வேண்டிய அவசரத்தின் காரணம் எங்களுக்கு விளங்கவில்லை.

போர்க்குற்றங்களுக்கு அடிப்படையான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், கலப்புப் பொறிமுறை பற்றி ரெலோவினர் முன்வைத்துள்ளதே முக்கியமான விவகாரம்.

ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் நீதி அமைச்சருடன் பேசி அதற்கான குழுவை அமைத்து, தமிழர் தரப்புடனும் பேசி ஆவன செய்வதாகக் கூறியதாக ரெலோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணை தொடர்பில் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பிவையுங்கள் எனக் கேட்டுக்கொண்ட பின்னர், இலங்கை அரசுடன் அது பற்றிப் பேச எதுவும் இருக்க முடியாது. காரணம், குற்றமிழைத்தவர்கள் எனக் கூறப்படும் இலங்கை அரசை எதிரிக்கூண்டில் நிறுத்தி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் கோரிக்கை அது.

ஆயினும், ரெலோ இந்த விடயத்திலே அதிலிருந்து தவறியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில், அந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருக்கக்கூடாது. இது ஒரு இராஜதந்திரச் சறுக்கல். ஏன் அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.