யாழ். செம்மணியில் கிருஷாந்தி படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!

யாழ். செம்மணிப் பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருஷாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் செம்மணி பகுதியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ்த் தேசியக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

1996ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்தபோது, செம்மணிப் பகுதியில் இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

செம்மணி இராணுவமுகாமில் கிருஷாந்தியைத் தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின் சகோதரனும் யாழ். பரியோவான் கல்லூரி மாணவருமான குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராகக் கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியைத் தேடிச் சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்துள்ளனர்.

இதன்போது மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணிப் பகுதியில் உள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.