இராஜாங்க அமைச்சரவைக்கு எதிராக சஜித் அணி ஏகமனதாகத் தீர்மானம்!

அதிக எண்ணிக்கையிலான இராஜாங்க அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்தமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்ப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு இன்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாடு மிகவும் பாரதூரமான முறையில் வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வாழ்க்கைச் செலவு அதிகரித்துப்போன நேரத்தில், அரசால் தன்னிச்சையாகவும், நெறிமுறையற்றதுமாக இராஜாங்க அமைச்சர்கள் 37 பேரளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பெரும் எண்ணிக்கையிலான இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது இத்தருணத்தில் நாட்டுக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, அது மேலும் இந்த நாட்டை அதலபாதாளத்துக்குத் தள்ளும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக நம்புகிறது.

இந்த வீணான நிலைமைக்கு எதிரான மக்களின் எதிர்ப்புப் போலவே குடிமக்கள் போராட்டத்தின் நோக்கங்களை மீறி இந்த மிகப் பெரிய இராஜாங்க அமைச்சரவையை நியமித்ததன் மூலம் அரசு பழைய வழமையான பாதையில் பயணிக்கின்றது என்பதையே மறைமுகமாக உணர்த்துகின்றது.

இதன் பிரகாரம், இந்தப் பாரிய இராஜாங்க அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்தமைக்கு எதிராக இன்று கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.