ராஜபக்ச குடும்பத்தின் பிணைக் கைதியாக ரணில்! – போட்டுத் தாக்குகின்றார் சஜித்.

“இந்நாட்டு மக்கள் மனதில் பொதுமக்கள் போராட்டமொன்று எழுந்தது மக்களை ஒடுக்கும் அரசை விரட்டியடித்து விட்டு ஜனநாயக அரசை ஸ்தாபிப்பதாக இருந்தாலும், நாட்டின் பொருளாதாரக் கொலையாளியான பிரிவினர்களின் தயவில் அவர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி நாற்காலியில் அமர வைத்துள்ளனர். அவர் கூட தற்போது ராஜபக்ச குடும்பத்தின் பிணைக்கைதியாக மாறியுள்ளார்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை தேர்தல் தொகுதியின் பிரதான அலுவலகத் திறப்பு விழாவும் தேர்தல் தொகுதிக் கூட்டமும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் போராட்டத்தைத் தாக்கியதால் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகினார். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கூட தேர்தல் காலத்தில் தாக்குதல்களையும் வன்முறைகளையுமே மஹிந்த தரப்பினர் மேற்கொண்டனர்.

ஐ.தே.க.காரர்களைத் தாக்கியவர்களுக்கும் ஐ.தே.க. உறுப்பினர்களைக் கொன்றவர்களுக்கும் கூட தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க அமைச்சுப் பதவிகளை வழங்கியுள்ளார்.

கடந்த காலங்களில் அம்பாறை மக்கள் சிறந்த முறையில் விவசாயம் செய்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அவர்கள் யாருடைய அடிமைகளோ அல்லது கைதிகளோ அல்லர்.

எனினும், அன்று சிறந்து விளங்கிய நாட்டின் விவசாயிகள், மீனவர்கள், கூலித்தொழிலாளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினர், அங்கவீனமான குடும்பத்தினர், பாடசாலை சிறுவர்கள் என அனைவரும் இன்று உதவியற்ற நிலையில் உள்ளனர்.

தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் திரிபோஷா கூட கொடுக்க முடியாத இந்த அரசு இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது.

தற்போது நெல்லுக்கு நல்ல விலை கிடைப்பதாகவில்லை. உர மானியம் கிடைப்பதில்லை. குழந்தைகளுக்கு பால் மா இல்லை. மண்ணெண்ணெய்யோ அல்லது பிற எரிபொருள்களோ இல்லாத நிலையில், மொட்டு அரசு தமக்கு நெருக்கமாகச் செயற்படும் பிரிவினர்களுக்கிடையே அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கொன்று குவித்த ராஜபக்சர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்காவிட்டாலும் அவர்களுடன் நட்புறவு கொண்டாடும் பிரிவினர்களூடாக அமைச்சுப் பதவிகளைப் பெற்று ராஜபக்சர்கள் விரும்பியவாறு நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 இலட்சமும் என நட்டஈடு வழங்கப்பட்டாலும் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு கோடிக்கணக்கு.

ஈஸ்டர் தாக்குதலில் எங்களுடைய சொந்த மக்களே கொல்லப்பட்டாலும் சுகபோகம் அனுபவிப்பது அமைச்சர்கள்தான்.

இவ்வாறான நிலவரங்களை உருவாக்க மக்கள் வீதியில் இறங்கவில்லை. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இதுவல்ல.

புதிய தேர்தல் மூலமே அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்காக அனைவரும் தயாராகவுள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.