கலக்கமடையத் தேவையில்லை; உரிய நேரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்!

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் அடுத்த மார்ச் மாதம் 20ஆம் திகதி காலாவதியாகும் என்பதால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற ரீதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஜே.சி. அலவத்துவல எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப்போது செப்டெம்பர் மாதம் என்பதால் அதற்கு இன்னும் காலம் உண்டு. உரிய காலத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பல பரிந்துரைகள் சட்ட வரைவுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் சட்டம் தொடர்பான சில பரிந்துரைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது ஆலோசித்து வருகின்றது.

தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உரிய நடவடிக்கைகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும். அதேவேளை உரிய முறைமைகளைப் பின்பற்றி அதற்கான நடவடிக்கைகள் சட்டப்படி முன்னெடுக்கப்படும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்த்தரப்பினர் கலக்கமடையத் தேவையில்லை. உரிய நேரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.