யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் இன்று

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தர் நியமனம் பெரும்பாலும் இன்று  இடம்பெறலாம் என பல்கலைக்கழக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் எப்ரல் மாதம் 30ஆம் திகதி துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரை தெரிவு செய்யும் வரை பேராசிரியர் க.கந்தசாமி தகுதிவாய்ந்த அதிகாரியாக   நியமிக்கப்பட்டார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் வெற்றிடத்திற்காக ஆறுபேர் விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூன்றுபேர் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இதில் முதலாவதாக விஞ்ஞான பீடம், தொழிநுட்ப பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எஸ் சற்குணராஜா, இரண்டாவதாக உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், மூன்றாவதாக வணிக முகாமைத்துவ முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
பரிந்துரைக்கப்பட்ட மூவரில் ஒருவரை ஜனாதிபதி அரசியல் யாப்பின் பிரகாரம்  தனக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தை பயன்படுத்தி நியமிக்க முடியும். குறித்த நியமனம் பெரும்பாலும் இன்று இடம்பெறலாம் என பல்கலைக்கழக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனமும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.