அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல்! யாருக்கு வெற்றி?

வரும் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். இவரே தலைவர் பதவியில் நீண்ட காலமாக இருந்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ராகுல்காந்தி தலைவராக இருந்தார்.

தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்ததால், தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றார். தற்போது வரை அவரே இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் அறிவித்தது.

அதன் படி இன்று காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதில், வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற உடனே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த தலைவர்கள் சசிதரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.