நாடு முழுவதும் 100 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை – முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய என்ஐஏ சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைக்கு பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் சோதனை அடிப்படையில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் முத்துத்தேவன் பட்டியில் உள்ள மதரஸாவில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் பி.எஃப்.ஐ தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோன்று, கடலூர் மாவட்டம் லால்பேட்டையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் பயாஸ் அகமதுவிடம் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை பூந்தமல்லி அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர்.

மதுரையில் கோரிப்பாளையம், நெல்பேட்டை, வில்லாபுரம், யாகப்பா நகர் பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐயினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.