கடலூரை உலுக்கிய மாணவி திலகவதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை…

கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள டி-பழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி (19). இவர் விருத்தாசலத்தில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதற்காக அங்கேயே வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.

பெற்றோர்களுடன் திலகவதி விருதாச்சலத்தில் வசித்து வந்த நிலையில் தனது 2019 ஆம் ஆண்டு திலகவதி மாலை வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், திலகவதியை அதே கல்லூரியில் படிக்கும் ஆகாஷ் என்பவர் காதலித்து அதை திலகவதி ஏற்க மறுத்ததால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் திலகவதி ஆகாஷின் செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்போது கடலூர் மாவட்டத்தில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

திலகவதியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஐந்து நாட்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாச்சலத்தில் பல மணி நேரம் சாலை மறியலும் நடைபெற்றதால் மாவட்டம் முழுவதும் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ் கைது செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரணையானது கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆகாஷ் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திலகவதி உறவினர்களே அவரை கொலை செய்து விட்டதாக ஆகாஷ் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா தீர்ப்பு வழங்கினார். அதில் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையில் உள்ளது போல எந்த ஒரு ஆவணங்களோ அல்லது சாட்சிகளோ நிரூபிக்கப்படாத காரணத்தினால் சந்தேகத்திற்கு இடம் இன்றி ஆகாஷ் குற்றவாளி அல்ல என தெரிய வருவதாகவும் அதனால் அவரை விடுவிப்பதாகவும் தெரிவித்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர் விடுவிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.