ஜெனிவா விவகாரம்: அன்று முரண் இல்லை; இன்று எவ்வாறு முரண்? – நீதி அமைச்சரிடம் சுமந்திரன் கேள்வி.

“இலங்கை அரசு 2015ஆம் ஆண்டு இணைஅனுசரணை வழங்கிய விடயம் இப்போது எப்படி அரசமைப்புக்கு முரணானது?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினனார்.

அதற்கு உருப்படியாகப் பதிலளிக்காத நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்துவதாகக் குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது, போர்க்குற்றம் தொடர்பில் வெளியக விசாரணைகள் இலங்கையின் அரசமைப்புக்கு முரணானவை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றுக் கேள்விக்கணை தொடுக்கப்பட்டது.

“கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் அனுசரணையில் அதாவது அவரது இணக்கத்துடன், இலங்கை தொடர்பில் 33/1 என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதில், சர்வதேச நாடுகளில் நீதிபதிகளால் விசாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் இலங்கையின் கோரிக்கைக்கு அமைய அது பொதுநலவாய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் நீதிபதிகள் என்றவாறு மாற்றப்பட்டிருந்தது.

எனினும், இந்த முறை வெளிவிவகார அமைச்சருடன் அப்போதைய மற்றும் தற்போதைய நீதி அமைச்சராக விஜதாஸ ராஜபக்சவும் ஜெனிவா சென்றிருந்த நிலையில், அரசி ன் நிலைப்பாடு அமர்வின்போது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியகப் பொறிமுறை அரசமைப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக 2015 ஆம் ஆண்டு அரசமைப்புக்கு உட்பட்டிருந்த இந்த விடயம், தற்போது அரசமைப்புக்கு முரணானது எப்படி?” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் கொண்டிருக்கும் அக்கறையை நானும் கொண்டிருக்கின்றோம். எனினும், மாறி வந்த அரசுகள் காரணமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டமை யாவரும் அறிந்ததே. இந்தநிலையில், இந்தப் பிரச்சினை குறித்து எதிர்வரும் வாரங்களில் வடக்கு, கிழக்கில் நிலையான சமாதானத்தைப் பேணும் வகையில் அந்தப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த உத்தேசித்துள்ளோம்” – என்று குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.