தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் இல்லை! – வீரசேகர மீண்டும் திமிர்த்தனம்.

“நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவர்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுகின்றார்கள். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வெளிவரும் செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ் மக்களுடன் அரசு விரைவில் பேச்சை ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். அதேவேளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இதயசுத்தியுடன் அரசு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மூன்று தலைவர்களினதும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய பிரச்சினைகள் என்றால் அது தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல. இந்த நாட்டில் தமிழ் மக்கள் மட்டுமா வாழ்கின்றார்கள்? மூவின மக்களுக்கும் பொதுவான பிரச்சினைகள் இருக்கின்றன. அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றன. முதலில் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

தேசிய பேரவையில் இணையமாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் சம்பந்தன் குழுவினர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைக் காணும் பேச்சுக்களை இதயசுத்தியுடன் அரசு நடத்த வேண்டும் என்று எப்படிக் கூறமுடியும்?

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. அவர்கள் நாட்டில் 24 மணிநேரமும் சுதந்திரமாக நடமாட முடியும். எங்கும் செல்லலாம்; எங்கும் குடியேறலாம்; எங்கும் வழிபடலாம். ஆனால், சிங்கள மக்களுக்கு எதிராகவும், பௌத்த மதத்துக்கு எதிராகவும்தான் தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த மக்கள் குடியேறவோ அல்லது வழிபடவோ முடியாத நிலைமையை தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தி வருகின்றார்கள். தமிழ் மக்கள் தாமாகவே பிரச்சினைகளைத் தேடுகின்றார்கள். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதற்கான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் வெளிவரும் செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.