ஜெனிவா சென்று தீர்வு காண முடியாது! – தமிழ்க் கூட்டமைப்புக்குக் கூறுகின்றார் ஹெகலிய.

ஜெனிவா செல்வதன் ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் இன, மத ரீதியான பிரச்சினைகள் இருந்தால் அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டும்.

பிரச்சினைகளுக்குப் பேச்சு மூலம் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் மிகவும் அக்கறையாக உள்ளனர்.

எனவே, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அரசு மீது நம்பிக்கை வைத்து நெருங்கிச் செயற்பட வேண்டும்.

அதைவிடுத்து அவர்கள் தொலைவில் இருந்துகொண்டு – எதிர்க்கட்சியினருடன் கைகோர்த்துக்கொண்டு அரசை விமர்சிப்பதில் எந்தப் பயனும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காக அரசுடன் பேச்சு நடத்த அவர்கள் முன்வர வேண்டும்.

ஜெனிவா செல்வதன் ஊடாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.