நிரந்தர அரசியல் தீர்வே தமிழர்களின் உயிர் மூச்சு!

“வடக்கு, கிழக்கில் போராலும் இடப்பெயர்வாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிரந்தர அரசியல் தீர்வு விரைவில் வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். அதுவே அவர்களின் உயிர் மூச்சாகவும் உள்ளது.”

இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் வந்திருந்த கரு ஜயசூரிய, பல தரப்பினரையும் சந்தித்து தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பேச்சு நடத்தியிருந்தார். இது தொடர்பில் அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கண்டிருந்தால் கொடிய போரையும், இடப்பெயர்வுகளையும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சந்தித்திருக்கமாட்டார்கள் என்று யாழ்ப்பாணம் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.

சுபீட்சமான எதிர்காலம் நோக்கிய தேசிய ஒற்றுமைக்கான – ஐக்கியத்துக்கான – நல்லிணக்கத்துக்கான பயணத்தில் கைகோர்க்கத் தமிழ் மக்கள் தயாராகவுள்ளனர். ஐக்கியத்தை அவர்கள் விரும்புகின்றனர். இதை நான் வரவேற்கின்றேன்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் அதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாகவுள்ளனர்.

தேசிய இனப்பிரச்சினையால் மூண்ட போர்தான் நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் மக்கள் தெரிவிக்கும் கருத்தில் நூறு வீதம் உண்மை உண்டு.

அதேவேளை, ஆட்சியாளர்களும் போரைப் பயன்படுத்தி நாட்டின் சொத்துக்களைக் கொள்ளையடித்துவிட்டு நாட்டைக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள் என்றும், பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே முழுப் பொறுப்பு என்றும் தமிழ் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டையும் எவரும் புறம் தள்ள முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.