22 இற்கான முழு உரித்தும் மக்கள் போராட்டத்துக்கே! – சஜித் சுட்டிக்காட்டு.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் பூரண உரிமைகளும் மரியாதைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பிரஜைகளுக்குமே வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 22 ஆவது திருத்த விவாதத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“69 இலட்சம் ஜனாதிபதி ஆணையும், 68 இலட்சம் பொதுத் தேர்தல் ஆணையும் கருத்திற்கொள்ளப்படாது தன்னிச்சையான அபிப்பிராயங்களை அடிப்படையாகக் கொண்டு கடுமையான முடிவுகளை எடுத்ததன் மூலம் ஒரு மக்கள் போராட்டம் ஏற்பட்டது. இதன் விளைவாக, ஏழு மூளை இருப்பதாகச் சொன்ன நிதி அமைச்சரும், பெரும்மன்னர் எனச் சொன்ன பிரதமரும், எதோச்சதிகார ஜனாதிபதியும் அவர்களது அடிமைக் கூட்டமும் ஓடிச் சென்றனர். அதன் காரணமாகவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தம் பேசுபொருளாகி முன் வந்தது.

இதன் பிரகாரம், 22 ஆவது திருத்தச் சட்டத்தின் பூரண உரிமைகளும் மரியாதைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பிரஜைகளுக்குமே வழங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் 225 பேருக்கு வரப்பிரசாதங்கள், சலுகைகள் வழங்கப்படுவது போலவே 225 இலட்சம் மக்களுக்கும் வரப்பிரசாதங்கள், சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

22 ஆவது திருத்தம் என்பது முழுமையான அரசமைப்புத் திருத்தம் இல்லையென்றாலும், அதன் முக்கிய காரணிகள் மீதான நம்பிக்கையினாலும், நாடு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு, சர்வதேச சமூகத்துக்கு இது சாதகமானதொரு நேர்மையான சமிஞ்சையைக் கொடுக்கும் என்ற உணர்வினாலும், மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும் நான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு ஆதரவளிக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.