நான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். போரிஸ் ஜான்சன்.

பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரே பிரதமராக நியமிக்கப்படுவார்.

தலைவர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களவை தலைவர் பென்னி மார்டண்ட் ஆகியோர் உள்ளனர். அநேகமாக அடுத்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு, லிஸ் டிரசிடம் தோல்வியைத் தழுவிய ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ரிஷி சுனக்கை போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், லிஸ் டிரசுக்கு பதிலாக மீண்டும் தான் பிரதமர் ஆவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிசம்பர் 2024-ல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் பின்னடைவை சந்திக்க உள்ள கட்சியை தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என போரிஸ் ஜான்சன், கட்சி எம்.பி.க்களிடம் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ஆளுங்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள், முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.