காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன கார்கே

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடந்த 17-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே-வும், சசி தரூரும் போட்டியிட்டனர். இதில், மல்லிகார்ஜுன கார்கே அமோக வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவராக இன்று பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன கார்கே.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை கார்கே-விடம் கட்சியின் தேர்தல் பிரிவு தலைவரான மதுசூதன் மிஸ்திரி வழங்கினார். முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் கார்கே பொறுப்பேற்று கொண்டார்.

தலைவருக்கான பொறுப்புகளை சோனியாகாந்தி ஒப்படைத்தார். இதன்மூலம், கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். இதற்காக காங்கிரஸ் தலைவர் அலுவலகத்தில், புல் தரையில் கூடாரம் அமைக்கப்பட்டும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொறுப்பேற்பதற்கு முன், ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் நினைவிடங்களில் கார்கே அஞ்சலி செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.