தமிழர்களுக்கு என்ன பிரச்சினை உண்டு? – கேள்வி தொடுக்கின்றார் ரோஹித.

“இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சுதந்திரமாக வாழும் தமிழ் மக்களுக்கு உண்மையில் என்ன பிரச்சினை உண்டு? தேசிய இனப்பிரச்சினை என்று அவர்கள் எதைக் கூறுகின்றார்கள்?”

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ராஜபக்சக்களின் சகாவான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் கேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் நாடகம். அதனால்தான் நான் உள்ளிட்ட ‘மொட்டு’வின் ஒரு தொகுதியினர், அந்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

22 ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு விவகாரத்தை வைத்துக்கொண்டு ‘மொட்டு’வுக்குள் பிளவு என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது.

‘மொட்டு’ அரசு இன்னமும் எழுச்சியுடன் பயணிக்கின்றது. தேர்தல் ஒன்று நடந்தால் அது நிரூபணமாகும்.

தமிழர் தீர்வுக்கான முதல் படியாகவே 22 ஆவது திருத்தச் சட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மையில் நான் கேட்கின்றேன் தமிழர்களுக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சினை உண்டு? தேசிய இனப்பிரச்சினை என்று அவர்கள் எதைக் கூறுகின்றார்கள்? தீர்வு என்று அவர்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள்?

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்; அனைத்து மாவட்டங்களிலும் அவர்கள் வசிக்கின்றார்கள். ஆனால், இந்தச் சுதந்திரம் சிங்களவர்களுக்கு இல்லை. வடக்கு, கிழக்கில் சிங்களவர்கள் சுதந்திரமாக வழிபடக்கூடிய நிலைமைகூட இல்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.