2023 பட்ஜட்: இன்று முதல் விவாதம் ஆரம்பம்! – டிசம்பர் 8 வரை நாடாளுமன்றம் கூடும்.

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான ஆரம்ப உரையை (வரவு – செலவுத் திட்ட உரை) ஜனாதிபதியும் நிதி பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவிருப்பதுடன், இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் தினமும் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரையும் நடைபெறவிருப்பதுடன், அதன் பின்னர் பிற்பகல் 5.30 மணி முதல் பிற்பகல் 6 மணி வரையான காலப் பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வி அல்லது சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.

இதன் பின்னர் ஒதுக்கீட்டுச் சட்டுமூலம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன் இது டிசம்பர் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதன் மீதான விவாதம் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 7 மணிவரை நடைபெறும். இதன் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி பிற்பகல் 7 மணிக்கு நடைபெறும்.

இதற்கமைய டிசம்பர் 8ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர கிழமையின் ஏனைய நாட்களில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும்.

வரவு – செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.