ATMமில் இருந்து 1 கோடி பணம் திருடிய வெளிநாட்டவர்கள் கைது.
தென் மாகாணம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள வங்கிகளில் ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் மீகஹதன்ன பொலிஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் நிலையத் பொறுப்பாளராகக் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் திருட்டுக்கு மூளையாக செயற்பட்ட கனேடிய மற்றும் பல்கேரிய பிரஜைகள் இருவரையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் இவர்களுக்கு உதவியுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் நீர்கொழும்பில் உள்ள இரவு விடுதியின் உரிமையாளர் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோசடியின் மூளையாக கருதப்படும் பல்கேரிய நாட்டவர் , கனேடிய பிரஜை என்பதுடன், அவர் வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவுக்குத் தப்பிச் செல்லவிருந்த வேளையில் இன்னுமொரு கனேடியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுக்கு தலைமை தாங்கி கொள்ளையில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவரும், பல நாடுகளுக்குச் சென்று இதுபோன்ற முறையில் பல நாடுகளின் பணத் திருட்டுகளில் ஈடுபட்ட இரு சர்வதேச குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவை, காலி மற்றும் பத்தேகமவில் உள்ள 3 ATM இயந்திரங்களின் கணினி அமைப்பில் போலி இலத்திரனியல் அட்டையைப் பயன்படுத்தி 111 மில்லியன் ரூபாவை சில நாட்களுக்கு முன்னர் திருடியுள்ளனர்.
இந்த வெளிநாட்டவர்களின் மூளையாக செயல்பட்டவர் தற்போது கனடாவின் குடியுரிமை பெற்ற பல்கேரியாவின் குடிமகன் ஆவார். சுமார் 35 வயதுடைய இந்த வெளிநாட்டவர் கணனி பாவனையில் சிறந்த அறிவுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆனால் கனடாவில் டாக்சி சாரதியாக இருப்பதாக இந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கணினி குற்றப் பிரிவினர் வழங்கிய தகவலின் பிரகாரம், இந்த நபர் மலேசியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற வேளையில், விமான நிலையத்தில் தடுத்து வைத்து , கணினி குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு முன், வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியில் உள்ள இடத்தில் வைத்து கணனி குற்றப்பிரிவு அதிகாரிகள் அவரது உதவியாளரான பல்கேரியரை கைது செய்துள்ளனர். இவரிடமிருந்தே , நாட்டை விட்டு தப்பிச் செல்லவிருந்த கனேடியர் தொடர்பிலான தகவல், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் இவர்களுக்கு பயண வசதிகளை செய்து கொடுத்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.