இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல்! – காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும்.

உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்ததன் பின்னர் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றும், நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாகக் கடைப்பிடியுங்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“339 உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு தனக்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. இனி உங்களின் பொறுப்பை நிறைவேற்றுங்கள்.
சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படும்.
வாக்களிப்பு நிலையத்தினுள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தல், படம் எடுத்தல், காணொளிகளைப் பதிவு செய்தல், ஆயுதங்களை வைத்திருத்தல், புகைப் பிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருட்கள் உபயோகித்தல், மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள்கள் பாவனையுடன் வாக்கெடுப்பு நிலையத்துக்குச் செல்லுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம் வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் விரும்பிய கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு எதிரே ஒரு புள்ளடியை மாத்திரம் இட்டு வாக்கைப் பதிவு செய்ய வேண்டும்.
வாக்களித்ததன் பின்னர் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அருகில் நடமாடுவதைத் தவிர்த்து அமைதியான முறையில் வீடுகளுக்குச் செல்லுங்கள்.
நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை நாட்டு மக்கள் அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்கெடுப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முழு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆகவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.