பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கிய இந்திய ராணுவம் : புதிய விடியோ

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய முப்படைகள் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நடத்தியது.

இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளில் 26 இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 8 மற்றும் 9ஆம் தேதி இரவு நேரங்களில் இந்திய எல்லைப் பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் கவனத்துடன் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்புத் துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டுக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் அழிக்கப்பட்டிருப்பது தொடர்பான விடியோக்களை இந்திய ராணுவம் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள், இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்படும் அடுத்தடுத்த விடியோக்களை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள், ஏவுதளங்கள் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ஏவுதளம் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், சியால்கோட் மாவட்டம் அக்னூரில் இருந்த பயங்கரவாதிகளின் ஏவுதளத்தை ராணுவம் அழித்தொழித்திருப்பதாகவும் அது தொடர்பான விடியோக்களையும் வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.