பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிப்பு!

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகையில்,‘ஜம்மு-காஷ்மீரின் அக்னூா் செக்டாா் எல்லைக்கு எதிா்ப்புறம் உள்ள சியால்கோட் மாவட்டத்தின் லூனி பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணிமுதல் ஜம்மு செக்டாரில் அமைந்துள்ள பிஎஸ்எஃப் பாதுகாப்புச் சாவடிகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வந்தது. இதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை பிஎஸ்எஃப் மேற்கொண்டது.
இது தவிர பிஎஸ்எஃப் நடத்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் துணை ராணுவத்தினரின் எல்லைச் சாவடிகள் மற்றும் கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்தன. இந்திய இறையாண்மையைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கையை பிஎஸ்எஃப் தொடா்ந்து மேற்கொள்ளும்’ என்றாா்.