இந்திய மாநிலம் கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், தீ விபத்தில் உடல் கருகி பலி!

இந்திய மாநிலம் கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், தீ விபத்தில் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தீப்பிடித்து எரிந்த வீடு
கேரள மாநிலம் பனிக்கன்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுபா (44). இவர் தனது தாயார் பொன்னம்மா (72), மகங்கள் அபிநந்த் (7) மற்றும் அபினவ் (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சுபாவின் வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இளைய மகன் அபினவ் தவிர ஏனைய மூவரும் தீயில் கருகி இறந்துவிட்டனர். அவர்களின் எரிந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், மீட்கப்பட்ட அபினவ் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக அவரும் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீ விபத்தில் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.