முப்பது வருட போர் காரணமாக வடக்கிலும் தெற்கிலும் ஏராளமானோர் ஊனமுற்றனர்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.

படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, படையினர் வரைந்த ஓவியங்கள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்டார்.

முப்பது வருட யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமானோர் உயிர்களையும் கைகால்கள் மற்றும் உடல் அங்கங்களை இழந்து நிரந்தரமாக ஊனமுற்றனர் என்று தெரிவித்த ஜனாதிபதி, இதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஊனமுற்ற படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மிஹிந்து செத் மெதுரா சுகாதார விடுதியில் பணிபுரியும் மருத்துவர்கள் தலைமையிலான உத்தியோகத்தர்களுடனும் ஜனாதிபதி அநுரகுமார கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். படையினருக்கு மேலும் மருத்துவ மற்றும் சேவை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, மிஹிந்து செத் மெதுர பொறுப்பதிகாரி பிரிகேடியர் டபிள்யூ. ஜீ. எஸ். டீ. எஸ். ராஜகருணா, இராணுவ சேவைகள் மற்றும் புனர்வாழ்வுப் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ. ஏ. எஸ். விஜயதாச உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி நிலை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.