இந்திய பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

இந்தியாவில் தொடர் தாக்குதல்களின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உயர் தளபதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா உயர் தளபதி சுட்டுக்கொலை
இந்தியாவில் பல பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தலைவர் சைஃபுல்லா காலித், பாகிஸ்தானில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் நேற்று மாட்லி நகரில் அவர் தனது இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியில் செல்வதை தவிர்க்குமாறு லஷ்கர் அமைப்பால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தும் இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மீதான தாக்குதல்
இந்திய அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்ட சைஃபுல்லா காலித், 2005 பெங்களூரு இந்திய அறிவியல் காங்கிரஸ் (ISC) தாக்குதல், 2006 நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீதான தாக்குதல் மற்றும் 2008 ராம்பூர் சிஆர்பிஎஃப் முகாம் தாக்குதல் ஆகிய மூன்று பெரிய பயங்கரவாத தாக்குதல்களின் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
இந்த மூன்று தாக்குதல்களிலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.