மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தச் செயலுக்கும் கனடா இடமளிக்கவே கூடாது! – தூதுவரிடம் அமைச்சர் இப்படி வேண்டுகோள்

“இலங்கை மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் கனடா இடமளிக்கக் கூடாது.”
இவ்வாறு இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸிடம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான கனேடியத் எரிக் வோல்ஸ் ஆகியோருக்கிடையில் நேற்று புதன்கிழமை கொழும்பில் அமைச்சகத்தில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கனேடியத் தூதுவரை அன்புடன் வரவேற்று, இலங்கையின் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் குறிப்பாக வடக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
அபிவிருத்தியில் பின்தங்கிய சமூகமாக வாழும் வடக்கு மக்களின் நிலை குறித்து இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், 30 வருட கால யுத்தத்துக்குப் பின்னரும் வடக்கு மக்கள் இன்னும் முறையான கவனம் செலுத்தப்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
கடந்த கால அரசுகள் தமிழ் மக்களைப் பெரும்பாலும் புறக்கணித்ததாகவும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு எந்தப் பாகுபாடுமின்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊழல், மோசடி மற்றும் இனவாதம் அற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் உள்ள பல சமூகங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகவும், 40 வீதமானோர் இன்னும் தற்காலிக கொட்டில்களில் வசிப்பதாகவும் அமைச்சர் விளக்கினார்.
பெற்றோரை இழந்த பிள்ளைகள், விதவைகள் மற்றும் பல முதியோர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 60 வீத மக்கள் கடன்பட்டு வாழ்வதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்தப் பெரும் சிரமங்களை அனுபவிப்பதாகவும், வன்னிப் பிரதேசத்தில் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடற்றொழிலில் ஈடுபடும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கனேடியத் தூதுவருடன் அமைச்சர் சந்திரசேகர் கலந்துரையாடினார். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் தெற்கு மீனவர்கள் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தமது தொழிலில் ஈடுபட்ட ஒரு காலம் இருந்ததாகவும், ஆனால் பாகுபாடு அரசியல் இலங்கையில் இனவாதத்தை வளர்த்து தேசிய ஒற்றுமையைச் சீர்குலைத்ததாகவும் அமைச்சர் கவலை தெரிவித்தார்.
நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எந்த வடிவத்திலும் இனவாதத்துக்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
அரசின் செயற்பாடுகளைக் குழப்ப மீண்டும் இனவாதப் பிரிவுகளைத் தூண்டிவிட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில தீய சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
இலங்கை மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் கனடா இடமளிக்கக் கூடாது என்றும் கனேடியத் தூதுவரிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ், இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கனடாவின் முழு ஆதரவை வழங்குவதாகக் கூறினார்.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு தேசிய மக்கள் சக்தி பெற்ற வலுவான மக்கள் ஆணையை அவர் குறிப்பாகப் பாராட்டினார்.
இந்த முயற்சிகளுக்குக் கனடாவின் தொடர்ச்சியான ஆதரவைத் தூதுவர் வெளிப்படுத்தினார்.
புதிய அரசை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளதாகவும் கனேடியத் தூதுவர் குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய படைவீரர்கள் தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையையும் கனேடியத் தூதுவர் பாராட்டினார்.
நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளர், கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜீனதாச, பொருளாதாரப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள மீன் வளர்ப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு கனேடியத் தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, கடல் அட்டை வளர்ப்பு மையங்களை நிறுவுவதற்கும், தனியார் – பொதுப் பங்காளித்துவங்களை ஊக்குவிப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் இந்தத் திட்டங்களுக்கான நிதி நிறுவனங்களைக் கண்டறிவதற்குக் கனடாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடல் அட்டை வளர்ப்பு மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கும், களு கங்கை நீர்த்தேக்கத்தில் புதிய மீன் வளர்ப்புத் திட்டங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளையும் கருத்தில்கொள்ளுமாறும் அவர் கோரினார்.
கனடாவின் வலுவான மீன்பிடித்துறையையும், மேம்பட்ட மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தையும் முன்னிலைப்படுத்திய தூதுவர் எரிக் வோல்ஸ், எதிர்காலத்தில் இந்தத் துறைகள் தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ், கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளர் பற்றிக் பிக்கரிங் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜீனதாச ஆகியோர் கலந்துகொண்டனர்.