தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழப்பு!

தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியில் அதிகப்படியான வெய்யில் கொளுத்திவந்த நிலையில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் புழுதிப் புயல் ஏற்பட்டு, நகரம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
தில்லி-நொய்டா, காசியாபாத் மற்றும் குருகிராம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. புழுதிப் புயலுக்கு 9 வயது சிறுமி உள்பட மூவர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
சஹானா என்கிற சாந்தினி ஒரு கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து இரும்பு ஜன்னல் பலகை விழுந்ததில் உயிரிழந்தார். அவர் உடனடியாக சிவில்லைன்ஸில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தென்கிழக்கு தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் லோதி சாலை மேம்பாலம் அருகே இடியுடன் கூடிய மழையின்போது மின்கம்பம் சரிந்து சாலையில் அந்த வழியாகச் சென்ற மாற்றுத்திறனாளி மீது விழுந்ததில், அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், வடகிழக்கு தில்லியின் கோகுல்புரி பகுதியில் மரம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் அசார்(22) என்பவர் இறந்தார்.
முகர்ஜி நகர் அருகே உள்ள ஒரு பழைய நடைபாதை மேம்பாலத்தின் கிரில்லின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. காஷ்மீர் கேட், மங்கோல்புரி பகுதியிலிருந்து மேலும் காயங்கள் பதிவாகியுள்ளன.
புதன்கிழமை மாலை தில்லியில் ஏற்பட்ட கடுமையான வானிலை மாற்றத்தின் காரணமாக இந்த இறப்புகள், காயங்கள் ஏற்பட்டுள்ளன.