தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் கைது! – ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியல்.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவ இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவ, அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான 4 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி போன்ற பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின் பேரில், கடந்த மே மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்ட துசித ஹல்லொலுவ, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

எனினும், கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் விதிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், அண்மையில் அவர் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு குற்றப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் துசித ஹல்லொலுவவை கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அவர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.