அநுர – மோடி முயற்சியால் மென்மேலும் வலுவடைந்த இலங்கை – இந்திய உறவு – தூதுவர் சந்தோஷ் தெரிவிப்பு.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மேற்கொண்ட இருதரப்பு முயற்சிகளால் இலங்கை – இந்திய உறவு மென்மேலும் வலுப்பெற்றுள்ளது.”
இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் பதுளை, பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் தொகுதி அங்குரார்ப்பண நிகழ்வில் இந்தியத் தூதுவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கின்றது. இந்தியாவின் உதவியுடன் செயற்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.

இது இலங்கை – இந்திய உறவின் ஆழத்தையும் நட்பையும் இது பிரதிபலிக்கின்றது.
இரு நாடுகளும் இணைந்து மக்களின் வாழ்க்கை நலனையும் முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றன.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மேற்கொண்ட இரு தரப்பு முயற்சிகளால் இந்த உறவு மென்மேலும் வலுப்பெற்றுள்ளது.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள், இரு நாடுகளுக்கிடையிலான உறவின் பாலமாக இருந்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் பொருளாதாரம், கல்வி, சமூக மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
இன்றைய திட்டம் — மொத்தம் 14 ஆயிரம் வீடுகள் — அந்தச் சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டத்தில் 4 ஆயிரம் வீடுகள் நிறைவு பெற்றுள்ளன.
2017 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இன்று அதில் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.
இந்திய அரசின் ஆதரவில் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மொத்தம் 65 ஆயிரம் வீடுகள், 64 பில்லியன் இலங்கை ரூபா மதிப்பில் கட்டப்படும். இது பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்குப் பாதுகாப்பான இருப்பிடத்தையும் மேம்பட்ட வாழ்க்கையையும் அளிக்கும்.
வீடுகள் கட்டுவது மட்டுமல்ல எதிர்காலத்தைக் கட்டுவதே இந்தியாவின் நோக்கம். கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, சமூக உட்புகுத்தல் போன்ற துறைகளிலும் இந்தியா இலங்கையுடன் இணைந்து பணிபுரிகின்றது.
இதுவரை பல பள்ளிகளுக்கு சயின்ஸ் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து, இந்தியா 2.5 பில்லியன் ரூபா மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதன் கீழ் பல சமூக மேம்பாட்டு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆசிரியர் பயிற்சி திட்டம் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
அதேபோல், சுகாதார வசதிகள், கல்வி நிறுவன மேம்பாடு, சமூக இணைப்பு ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அண்மைய விஜயத்தின் போது சீகதா அம்மன் ஆலய அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கான உதவிகளையும் அறிவித்திருந்தார். இதனால் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் வேகமாக நடைபெறும்.
இந்தியாவின் உதவி என்பது ஒரு நண்பனின் உதவியல்ல – ஒரு குடும்ப உறுப்பினரின் பொறுப்புணர்வு கொண்ட உதவியாகும்.
இன்றைய நிகழ்வில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய பூர்வீகத் தமிழர் சமூகத்துக்கான ஆதரவு எப்போதும் தொடரும்.
திருவள்ளுவர் கூறியது போல்,
“விருப்பறாச் சுற்றம் இகயின் அருப்பறா ஆகும் பலவும் தரும்.”
அதாவது, உண்மையான பாசமும் நம்பிக்கையும் கொண்ட உறவு பல நன்மைகளை அளிக்கும்.
அந்த உறவின் அடிப்படையில்தான் இலங்கை – இந்திய நட்புறவு வேரூன்றி வளர்ந்து வருகின்றது.
இறுதியாக, நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த வீடமைப்புத் திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் தங்கள் புதிய இல்லங்களில் ஒளியையும் நம்பிக்கையையும் காணட்டும்.” – என்றார்.
