நுஜா ஊடக அமைப்பின் 21ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் கௌரவிப்பு நிகழ்வும்!
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(நுஜா) வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் மசாலா கார்டனில் இடம்பெற்றது.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் பாறூக் நஜீத், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள் எம்.றுக்ஸான், சபூர் ஆதம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார், ஈ.சி.என். கல்லூரியின் பணிப்பாளர் பாஸித், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் இணைப்பாளர் யூ.எம்.ஹபீஸா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இங்கு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தவிசாளர் ஏ.எல்.றமீஸ் வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன் தலைவர் எஸ்.எம்.அறூஸால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.
நுஜா ஊடக அமைப்பு கடந்த 21 வருடங்கள் கடந்து வந்த பாதையை மிக சிறப்பான முறையில் சபையோருக்குத் தெளிவுபடுத்தியதுடன், எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்துப் பேசினார்.

மேலும், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் பலரும் உரையாற்றியதுடன் நுஜா ஊடக அமைப்பின் பணிகளையும் பாராட்டிப் பேசினர். அத்தோடு ஊடகத்துறையின் வளர்ச்சிக்கு ஊடகவியலாளர்கள் நவீன தொழிநுட்பத்துறையில் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அதன்மூலம் தங்களது வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும் எனவும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம் இங்கு குறிப்பிட்டார்.

அரசியல்வாதியாக இருந்தாலும், வேறு எந்த சக்தியாக இருந்தாலும் அவர்களைப் பற்றிய நல்ல விடயங்களை எழுதுவது போல், அவர்கள் விடுகின்ற பிழைகளையும்,மோசடிகளையும் எழுதுவதற்கு பயப்படக்கூடாது. நூன் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தில் ஒருபோதும் தலையிவதில்லை என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் பாறூக் நஜீத் தெரிவித்தார்.

இங்கு, ஊடகவியலாளர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் சமூகப்பணி செய்துவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள் சபூர் ஆதம்,எம்.றுக்ஸான், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் பாறூக் நஜீத், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் இணைப்பாளர் யூ.எம்.ஹபிஸா ஆகியோர் பொன்னாடை போர்த்திப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
மேலும், இயற்கை குளியல் பொதி தயாரிப்பில் ஈடுபடும் ஏ.எல்.பாத்திமா பர்ஹானா இங்கு அம்பாறை மாவட்ட சனசமூக நிலையங்களின் சம்மேளனத்தின் தலைவி யூ,எல்.சிப்லியா மற்றும் பாத்திமா அப்ரின் ஆகியோரினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டு இங்கு அறிவிக்கப்பட்டது.
இதன்படி தலைவராக எஸ்.எம்.அறூஸ், பிரதித் தலைவராக ஏ.எல்.றமீஸ், உப தலைவர்களாக எஸ்.எல்.மன்சூர், ஹிதாயா நௌபல், செயலாளராக எம்.எச்.முஸ்தாக் முகம்மட், பிரதிச் செயலாளராக ஏ.எல்.கியாஸ்தீன், பொருளாளராக எஸ்.எல்.எம்.அபூபக்கர், தவிசாளராக யூ.எம்.ஹபீஸா, பிரதித் தவிசாளராக பௌமி, தேசிய அமைப்பாளராக பைசல் இஸ்மாயில், உயர்பீட உறுப்பினர்களாக ஏ.சி.றியாஸ், எம்.ஏ.எம்.மாஹிர், எச்.பாரீஸ்,நௌசாட், ஹமீட், எஸ்.எல்.பாத்திமா அப்ரின், எம்.எல்.எம்.பாரீஸ்,ஏ.ஆர்.எம்.சியாத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
