முன்னாள் அமைச்சர் இராசதுரை காலமானார்!

முன்னாள் இந்து கலாசார அபிவிருத்தி அமைச்சரும் தந்தை செல்வாவால் அரசியலுக்குள் அழைத்து வரப்பட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் மிக நீண்டகாலம் முக்கிய தலைவராக விளங்கியவருமான செல்லையா இராசதுரை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறுகின்றன.

1927 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி மட்டக்களப்பு நகர் புளியந்தீவில் பிறந்தவர் செல்லையா இராசதுரை.

மட்டக்களப்பு அரசடி வித்தியாலயத்தில் (தற்போது மகாஜனக் கல்லூரி) ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ஊடகவியலாளராக ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக முதன்முதலாக தந்தை செல்வாவால் நிறுத்தப்பட்டு, மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

தொடர்ந்து மார்ச் 1960, ஜூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியதும் பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.

பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் புலம் பெயர்ந்து மலேசியாவில் சிலகாலம் வாழ்ந்து பின்னர் சென்னையில் வசித்தார்.

இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.

ஏறக்குறைய 33, வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வடகிழக்கில் தொடர்சியாக மக்களால் தெரிவானவர் இவர் மட்டுமே.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது மேயரும் இவரே.

1973, செப்டம்பர் ,07 இல் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் செல்லையா இராசதுரையும் அ.அமிர்தலில்கமும் தலைவர் பதவியைப் பெறுவதற்காகப் போட்டி நிலை உருவான வேளையில் தந்தை செல்வா தலையிட்டு இருவரையும் சாந்தப்படுத்தி, செல்லையா இராசதுரையை விட்டுக் கொடுக்கொடுக்குமாறு கூறி அ.அமிர்தலிங்கத்தைத் தலைவராகத் தெரிவு செய்தார்.

1977, ஜூலை,21 இல் இறுதியாக நடைபெற்ற தொகுதிவாரியான தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இவரைத் தோற்கடிக்க கவிஞர் காசி ஆனந்தனை இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளராகவும், செல்லையா இராசதுரையை தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் போட்டியிட வைத்தபோதும் இவரே வெற்றி பெற்றார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை விட்ட பொறுப்பற்ற செயலால் இருவரை வேட்பாளராக நிறுத்தியபோதும் செல்லையா இராசதுரையே வெற்றிபெற்றார். அவர் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை தமக்குத் துரோகம் செய்ததாகக் கூறிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து இந்து கலாசார அமைச்சர் பதவி பெற்றார்.

இவர் எழுதிய நூல்கள்:

* ராசாத்தி – குறும் புதினம் – 1982
* பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் – சொற்பொழிவுகளின் தொகுப்பு
* அன்பும் அகிம்சையும் – தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
* மிஸ் கனகம் – சிறுகதைத் தொகுப்பு
* இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்

Leave A Reply

Your email address will not be published.