அனோஜன் விவகாரத்தில் சாதகமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர அழுத்தங்களை ஜனாதிபதி அநுர வழங்க வேண்டும்! – சிறீதரன் எம்.பி. கடிதம் மூலம் கோரிக்கை.

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது குடும்பப் பின்னணியைக் கருத்திற்கொண்டு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர அழுத்தங்களை வழங்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத நிந்தனைக் குற்றச்சாட்டில் சவூதி நீதிமன்றத்தால் முன்னர் தண்டிக்கப்பட்ட அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள அந்தக் கடிதத்தில் சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளதாவது:-

“சிவராசா அனோஜன் குற்ற நோக்கத்துடன் சவூதிக்குச் செல்லவில்லை. பெற்றோர் சிவராசா மற்றும் யோகேஸ்வரி அடங்கிய குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்து, வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கத்துடனேயே அவர் அங்கு புலம்பெயர் தொழிலாளராகப் பணியாற்றினார்.

பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில் இந்தக் குடும்பமும் ஒன்றாகும்.

இவ்வாறான கடுமையான தண்டனை, ஏற்கனவே இன்னல்களை எதிர்கொண்டுள்ள ஒரு குடும்பத்தின் எதிர்கால வாழ்வை முற்றாகச் சீர்குலைத்து மேலும் கீழ்நிலைக்குத் தள்ளும் விளைவை ஏற்படுத்தும்.

சவூதி அரேபியாவின் மதப் பாரம்பரியம், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் சட்ட ஆட்சியை முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன. அந்த அறவிழுமியங்களின் அடிப்படையில் அனோஜனின் வயது, குடும்பப் பின்னணி மற்றும் சமூக-பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

எனவே, தர்மம் மற்றும் அறத்தின் அடிப்படையில் இவற்றுக்குச் சாதகமான தீர்வொன்றை வழங்குவதற்காகச் சவூதி அரேபிய அரசுடன் இணைந்து அவசியமான இராஜதந்திர நடவடிக்கைகளையும் அழுத்தங்களையும் வழங்குமாறு உங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.