இந்தியாவுடனான ஒப்பந்தத்தை அரசு வெளிப்படுத்த வேண்டும்! – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அநுர அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடம் இலங்கைக்கு வந்திருந்தார். இதன்போது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விடயங்களில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. எனினும், ஒப்பந்தங்களின் அம்சங்கள் தொடர்பில் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் வெளிப்படுத்தப்படவில்லை. அத்துடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகவும் பெறமுடியாத நிலையே உள்ளது. எனவே, ஒப்பந்தங்களின் அம்சங்கள் தொடர்பில் அரசு வெளிப்படுத்த வேண்டும்.” – என்றார்.
