பிரதமர் ஹரிணியுடன் தமிழரசு எம்.பிக்கள் சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறீதரனின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது நேற்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே நேற்று காலை 10.30 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இதன்போது தமிழ் மொழி மூல வரலாற்று நூல்கள் மற்றும் பாடத்திட்டங்களில் தமிழர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளமை பற்றி பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அவற்றை மீண்டும் பாடப்புத்தகங்களில் கொண்டுவரவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களை இந்த விடயத்தில் தொடர்புபடுத்தி வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்து அவற்றைத் தமிழ்மொழி மூலப் பாடத்திட்டத்தில் உள்ளீர்ப்பு செய்ய இதன்போது பிரதமருக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் வரலாறுகள் பாடத்திட்டங்களில் உள்ளீர்ப்பு செய்யப்படும் என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன் தமிழ்ப் பாடப் புத்தகங்கள் மற்றும் தரம் – 01 இற்கான பாடப்புத்தகங்களில் அதிக எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன என்று இதன்போது பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவற்றையும் விரைவாகத் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் தயாரிக்கும்போது அவை ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் மொழி மாற்றம் செய்யப்பட்டே தமிழுக்கு மாற்றப்படுகின்றது. அதில் குறிப்பாக உயிரியல் பாட வினாத்தாள்கள். அவ்வாறு மொழி மாற்றம் செய்யும்போது நிறையப் பிழைகள் ஏற்படுகின்றன. மொழி மாற்றத்தில் காணப்படும் சிக்கலினால் பரீட்சைப் பெறுபேறுகளிலும் அதிக தாக்கம் ஏற்படுகின்றது. இந்த விடயத்துக்கும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெவ்வேறு திட்டங்களினூடாக அமைக்கப்பட்ட பல பாடசாலை கட்டடங்கள் இன்னும் பூரணப்படுத்தப்படாமல் உள்ளன. அவற்றில் சில ஆபத்தான நிலையில் இடிந்துவிழும் நிலையில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அவற்றைப் பூரணப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டது.

இங்கு பதிலளித்த பிரதமர், கடந்த வருடம் மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் பாவிக்கப்படாது மீண்டும் திருப்பியனுப்பப்பட்டுள்ளது. இவ்வருடம் உரிய அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நேரடியாகத் தலையிட்டு மேற்படி விடயங்களுக்கும் குறித்த நிதியைப் பயன்படுத்தவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆரம்ப குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கற்கை நெறியைக் கடந்த 8 மாதங்களாக தமிழ் மொழி மூலம் கற்று வருகின்றவர்கள் அதற்கான பரீட்சையை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகின்ற விடயம் தொடர்பில் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனை அக்கறையோடு கேட்டுக்கொண்ட பிரதமர் விடயத்தைக் குறிப்பெடுத்ததுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பெருந்தொகை ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பிலும் பிரதமருடன் பேசப்பட்டது. வடக்கில் தமிழ்மொழி மூலம் 3 ஆயிரத்து 771 வெற்றிடங்களும், சிங்கள மொழி மூலம் 68 வெற்றிடங்களும், கிழக்கில் 5 ஆயிரத்து 854 வெற்றிடங்களும் நிலவுகின்றன என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந்த வருட ஆசிரிய நியமனங்களின்போது இயலுமானவரை இந்த வெற்றிடங்களை நிரப்பத் தாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.

மேற்படி முக்கிய விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து சிறீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், துரைராசா ரவிகரன், மருத்துவர் சிறீநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.