மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துக! – அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து.

https://we.tl/t-r1PrPsLw18uAj9Jv

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பான தவறான கருத்துக்கள், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் முயற்சி, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,

“உயர் நீதிமன்ற நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடிப்பது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எதிர்ப்பு வெளியிட்டமை, ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன் தெரிவித்த பொய்க் கூற்றை வன்மையாகக் கண்டிக்கின்றேன். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையில் எவ்வித அரசியல் கொடுக்கல் வாங்கல்களும் இல்லை.

உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தொடர்ந்து முயல்வது தவறானது.

நீதிமன்றங்களில் வழக்குத் தேக்கத்தைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கலாம். தனிநபர்களை மையமாகக் கொண்ட அரசமைப்புத் திருத்தங்களுக்கு மக்கள் தீர்ப்பு (சர்வசன வாக்கெடுப்பு) காணப்பட வேண்டும். மேலும், நீதியரசர்களின் 8 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் குறுக்கு வழியில் செல்வது தவறான முன்னுதாரணம்.

நாட்டின் 7 ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலா விடுதிகளாக மாற்றப்படும் என்று கூறப்பட்ட போதிலும், 2025ஆம் ஆண்டில் அவற்றின் பராமரிப்புக்காக 33 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அம்மாளிகைகளில் தங்கியிருக்காவிட்டாலும், 3 ஆயிரத்து 89 பேர் அம்மாளிகைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இது நிதி முறைகேடு ஆகும்.

கடந்த அரசின் காலத்தில் நுவரெலியா தபால் நிலையத்தைச் சுற்றுலாத் துறைக்காக மாற்ற முற்பட்டபோது எதிர்த்த தற்போதைய ஆட்சியாளர்கள், இன்று அதே தபால் நிலையத்தைச் சுற்றுலா விடுதியாக மாற்றத் தயாராகி வருவது மக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.

நாட்டின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது என்று அரசு பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கின்றது. கடந்த மாதத்தில் மட்டும் 35 ஆயிரத்து145 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மக்கள் வறுமை காரணமாக அடகு வைக்கப்பட்டுள்ளன. மேலும், 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின்படி அன்றாடச் செலவுகளுக்காக மேலும் 7 டிரில்லியன் ரூபா கடன் பெற அரசு எதிர்பார்ப்பது ஏன்?

தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், தேவிநுவர பெரஹரா நிகழ்வில் பாதாள உலகக் குழுவினரின் அச்சுறுத்தல் காரணமாக நடன நிகழ்வொன்று நிறுத்தப்பட்டமை பாதுகாப்பின் பலவீனத்தையே காட்டுகின்றது.

எனவே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் உடனடியாக நடத்த வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.