பாடசாலைகளில் நிதி சேகரிக்க இந்த அரசில் அனுமதி இல்லை! – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ், பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எவ்விதமான சட்டபூர்வ அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பாடசாலைகளில் பல்வேறு செயற்பாடுகளுக்காக, மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி சேகரிக்கப்படும் நடைமுறை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், தற்போதைய சூழலில் இவ்வாறான நிதி சேகரிப்புகளுக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை.

நிதி வழங்கக் கோரி சில குழுக்கள் அல்லது தனிநபர்கள் மேற்கொள்ளும் அழுத்தங்களால் மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளானால், மாணவர்களின் நலன் கருதி அதில் தலையிடும் அதிகாரம் கல்வி அமைச்சுக்கு உண்டு.

அதேவேளை, பாடசாலைகளுக்கு ஆதரவளிக்க விரும்பும் பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்கள் தன்னிச்சையாக வழங்கும் பங்களிப்புகளைத் தடுக்க முடியாது.

இதுவரை நிதி சேகரிப்பு தொடர்பாக அமைச்சுக்கு உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை.” – என்றார்.

இதேவேளை, அனைத்துப் பாடசாலைகளுக்கும் ‘ஸ்மார்ட் போர்டுகள்’ கட்டாயமானவை அல்ல என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெளிவுபடுத்தினார்.

“புதிய கல்வி மறுசீரமைப்புகளைப் பாடசாலைகளில் தற்போதுள்ள வசதிகளைக் கொண்டே நடைமுறைப்படுத்த முடியும். செய்முறைப் பயிற்சிகள் மற்றும் செயற்பாடுகளை மையமாகக் கொண்ட கற்றல் முறைகளுக்கே புதிய சீர்திருத்தங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.” – என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.