மக்களால் தூக்கி வீசப்பட்டவர்களே தேர்தலை நடத்தக் கோரி ஒப்பாரி! – மொட்டுக் கட்சியின் சவாலுக்கு அமைச்சர் சுனில் பதிலடி.

கடந்த காலங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே, தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ‘ஒப்பாரி’ வைப்பதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சாடியுள்ளார்.

“துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விடுத்த சவாலுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“செப்டம்பர் 21ஆம் திகதி மக்கள் வழங்கிய தீர்ப்பு இன்னும் ஈரம் காயவில்லை. நீண்டகாலமாகத் தேர்தல்களை நடத்தாமல் முடக்கி வைத்திருந்தவர்கள், இன்று ஜனநாயகம் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. மக்கள் எதற்காக இந்த அரசைத் தெரிவு செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்; அந்தப் பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்றி வருகின்றோம்.

தேர்தல்களைக் கண்டு அஞ்சும் தேவையோ அல்லது மக்கள் செல்வாக்கை இழந்துவிடுவோம் என்ற பயமோ இந்த அரசுக்கு இல்லை. முறையான காலத்தில், உரிய முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும், திருடப்பட்ட மக்கள் பணத்தை மீட்பதுமே எமது தற்போதைய முன்னுரிமையாகும்.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இதனைப் ‘பழிவாங்கல்’ என்று கூச்சலிடுவதன் மூலம் எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது.

ராஜபக்ஷக்களின் நிழலில் இருந்து அரசியல் செய்தவர்கள், இப்போது மக்கள் செல்வாக்கு பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது. முடிந்தால் மீண்டும் மக்களிடம் சென்று ஆதரவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” – என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சவால் விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.