இளைஞர்களின் குரலை நசுக்குகிறது அநுர அரசு! – சஜித் கடும் விசனம்.

நாடாளுமன்றக் குழுக்களில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதிநிதித்துவத்தை தற்போதைய அரசு நீக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் அங்கத்துவத்தை இழந்த இளைஞர்களை, கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அரகலய மக்கள் போராட்டத்தின் முக்கிய பெறுபேறாகவே, நாட்டின் கொள்கை வகுக்கும் பணிகளில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 400 இளைஞர்கள் நாடாளுமன்றக் குழுக்களில் உள்வாங்கப்பட்டு, தமது கருத்துக்களை முன்வைக்க வழிவகை செய்யப்பட்டது.

இருப்பினும், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் எண்ணிக்கையைக் குறைத்ததுடன், இளைஞர்களின் பங்களிப்பையும் முற்றாக நீக்கியுள்ளது. போராட்டத்தின் பிரதான கோரிக்கையை நடைமுறைப்படுத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், புதிய அரசு அந்த வாய்ப்பைப் பறித்திருப்பது பாரிய ஜனநாயக மீறலாகும்.

இளைஞர்களை இந்தக் குழுக்களில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அரசு அதனைச் செவிமடுக்கவில்லை. நாட்டின் சனத்தொகையில் 25 வீதத்தைக் கொண்டுள்ள இளைஞர் தலைமுறையினருக்குக் கொள்கை வகுப்பதில் வாய்ப்பளிப்பது ஜனநாயகத்தின் கடமையாகும். இளைஞர்களின் குரலை நிராகரித்து ஒரு நாடு ஒருபோதும் முன்னேற முடியாது.

எனவே, இளைஞர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இந்த நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை மீண்டும் உடனடியாக வழங்குமாறு அரசாங்கத்தை நான் வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.