எரிசக்தி அமைச்சருக்கு எதிரான பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிப்பு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாளை வியாழக்கிழமை சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக இந்தத் தகவலை இன்று ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எரிசக்தி அமைச்சின் தற்போதைய செயற்பாடுகள், முறையற்ற நிர்வாகம் மற்றும் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்குத் தீர்வு காணாமை தொடர்பாக முன்வைக்கப்படும் அதிருப்தியின் வெளிப்பாடாகவே இந்தப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது. இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ளனர்.” – என்றார்.

இந்தப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட பின்னர், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது இது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது குறித்த அறிவிப்பைச் சபாநாயகர் உத்தியோகபூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, கியூ.ஆர். முறைமையில் உள்ள சிக்கல்கள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.