போரின் தீப்பொறி அணைந்து அமைதியின் விளக்கு ஏற்றப்பட வேண்டும்! – பெருநாள் வாழ்த்துச் செய்தியில் சஜித் .

உலகெங்கும் போரின் தீப்பொறிகள் அணைந்து, அமைதியின் விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் புனித ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்தத் தருணத்தில், இஸ்லாம் போதிக்கும் மானுட தர்மங்களை ஆழமாகச் சிந்திப்பது அவசியமாகும். நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஸகாத் (ஏழை வரி) மற்றும் ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகளும், அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த ஒரு சமூக வாழ்விற்கான வழிகாட்டல்களாகும். ரமழான் நோன்பு என்பது அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் ஆன்மீகத் தூய்மை குறித்த பாடங்களை நமக்குக் கற்றுத் தருகின்றது.

பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர்ச் சூழலுக்குத் தீர்வுகாண இஸ்லாம் காட்டும் பொறுமை, கருணை, ஒற்றுமை மற்றும் மனிதநேயமே முதன்மையான வழிகளாகும்.

வெறுப்பை கருணையினாலும், பிளவுகளை ஒற்றுமையினாலும் எதிர்கொள்ளும் ஒரு செயற்றிட்டத்தின் மூலமே உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியும். மோதல்களைத் தீர்ப்பதற்கு வலிமை அல்லது சட்டம் மட்டும் போதுமானதல்ல; மக்களின் சிந்தனைகளை நல்வழியில் உறுதிப்படுத்துவதே முக்கியமானது.

ரமழான் காலத்தில் முஸ்லிம்கள் தமது மன உறுதி மூலம் வெளிப்படுத்தும் அந்த உன்னத மனித சிந்தனைகள், உலகெங்கும் அமைதி மற்றும் சமூக நீதிக்கான மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம். அத்தகைய சிந்தனைகள் மக்கள் மனங்களில் ஒளிர்ந்தால், போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி நிலவுவது உறுதி.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலகெங்கும் வாழும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது இனிய ஈதுல் பித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.