அனைவரினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட சுபீட்சமான தேசத்தை உருவாக்க ஒன்றிணைவோம் – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அழைப்பு.

அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்ட, அமைதி மற்றும் சுபீட்சம் நிறைந்த தேசமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு அவர் விடுத்துள்ள புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாக ஈதுல் பித்ர் பெருநாள் அமைகின்றது. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் அவசியத்தைப் பிரதிபலிக்கின்றது.

மற்றவர்களின் பசி மற்றும் அதன் வலியைத் தனது சொந்த அனுபவமாக உணர்ந்து, சகோதரத்துவ உணர்வுடன் பிறரை அரவணைக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதே ரமழானின் உன்னதமான நோக்கமாகும். அமைதி, சமத்துவம் மற்றும் சகவாழ்வு போன்ற விழுமியங்களால் இக்காலப்பகுதியில் மனிதப் பண்புகள் செதுக்கப்படுகின்றன.

முழு உலகமும் சவாலானதொரு சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் ஒரு தருணத்திலேயே இம்முறை பெருநாளை நாம் கொண்டாடுகின்றோம். ரமழான் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பிரார்த்தனைகளின் ஆசீர்வாதத்தால், இந்த இக்கட்டான நிலைமை விரைவில் நீங்கி, அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்ற சூழல் உருவாக வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

ஏனைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது போலவே, தற்போதைய சவால்களையும் முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் சரிவுகள் இன்றி முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அரசு என்ற ரீதியில் நாம் உறுதியான இலட்சியத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

பேதங்களை மறந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கான இந்த வேலைத்திட்டத்துடன் கைகோர்த்து, அதற்குத் தேவையான பலமான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். முஸ்லிம் சகோதரர்களுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த இனிய ஈதுல் பித்ர் பெருநாளாக இது அமைய எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.