சமையல் எரிவாயு விலைகள் சடுதியாக உயர்வு!
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 4 ஆயிரத்து 765 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், 5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலை ஆயிரத்து 910 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2.3 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 890 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் நிறுவனமும் தனது எரிவாயு கொள்கலன்களின் விலைகளை பாரியளவில் அதிகரித்துள்ளது.
அதற்கமைய 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 5 ஆயிரத்து 700 ரூபாவாகும்.

அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2 ஆயிரத்து 280 ரூபாவாகும்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், எரிவாயு விலைகளின் இந்தத் திடீர் உயர்வு நடுத்தர மற்றும் வறிய குடும்பங்களுக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் இந்த விலை உயர்வால் உணவுகளின் விலைகளை அதிகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
