நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி!
“மத்திய கிழக்கு யுத்த நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, 100 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிய விசேட நிவாரணப் பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இன்று நண்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே, அடுத்த மூன்று மாதங்களுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விசேட சலுகைகளை அவர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.
நிவாரணப் பொதியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
எரிபொருள் விலைச் சலுகை
மே முதலாம் திகதி கணக்கிடப்படும் உண்மையான செலவின் அடிப்படையில், டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாவும், பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாவும் மானியமாக வழங்கப்படும்.
இதற்காக அரசாங்கம் மாதம் 20 பில்லியன் வீதம், மூன்று மாதங்களுக்கு 60 பில்லியன் ரூபாவைச் செலவிடவுள்ளது.
சுப்பர் டீசல் மற்றும் சுப்பர் பெற்றோல் ஆகியவை தற்போதைய சந்தை விலையிலேயே விற்பனை செய்யப்படும்.
மீனவர்களுக்கான நிவாரணம்
ஒருநாள் படகுகளுக்கு: லீற்றர் ஒன்றுக்கு 50 ரூபா வீதம், மாதத்துக்கு 25 நாள்களுக்கு (நாளொன்றுக்கு அதிகபட்சம் 25 லீற்றர்) மூன்று மாத காலத்துக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படும்.
ஆழ்கடல் பல்தினப் படகுகளுக்கு: ஒருமுறை மட்டும் வழங்கப்படும் விசேட கொடுப்பனவாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.
விவசாயிகளுக்கான உர மானியம்
நெற்செய்கைக்காக வழங்கப்பட்டு வந்த 25 ஆயிரம் ரூபா உர மானியம், தற்போது 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மேலதிகப் பயிர்ச்செய்கைகளுக்கான மானியம் 15 ஆயிரம் ரூபாவிலிருந்து 18 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி
கொடுப்பனவுகள்
ஏப்ரல் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.
* 17,500 ரூபா கொடுப்பனவு 25,000 ரூபாவாக உயர்வு.
* 10,000 ரூபா கொடுப்பனவு 15,000 ரூபாவாக உயர்வு.
* 5,000 ரூபா கொடுப்பனவு 7,500 ரூபாவாக உயர்வு.
எதிர்காலத் திட்டம்
இந்த நிவாரணப் பொதியானது அடுத்த மூன்று மாதங்களை இலக்காகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, இதற்கடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
