எந்தவொரு சமூகமும் தங்களை சிறுபான்மையினராக நினைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! – திலித் ஜயவீர எம்.பி. உறுதி.
நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவும், இளைஞர் யுவதிகளின் முன்னேற்றத்துக்காகவும் உண்மையானதும் நேர்மையானதுமான ஒரு சமூக ஒருமைப்பாடு அவசியமானது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“டொலர்களை அடிப்படையாகக் கொண்ட கூட்டணிகளோ, அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டணிகளோ அல்லது தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக அமைக்கப்படும் சுயநலக் கூட்டணிகளோ இந்த நாட்டுக்குத் தேவையில்லை. மாறாக, மக்களின் உண்மையான தேவைகளை உணர்ந்த ஒரு சர்வஜன கூட்டணியே இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகும்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் அரசியல் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைய, இந்நாட்டில் வாழும் எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும், எவ்வித காரணத்துக்காகவும் தாங்கள் இந்த நாட்டில் ‘சிறுபான்மையினர்’ என நினைப்பதற்கோ அல்லது தங்களைத் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகக் கருதுவதற்கோ ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நான் இந்த இடத்தில் உறுதியளிக்கின்றேன்.” – என்றார்.
