யாழ். போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம் – புதிய இருதய கதிரியக்க ஆய்வு கூடம் திறந்து வைப்பு.

வடக்கு மாகாணத்தின் முதன்மை மருத்துவ நிறுவனமான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, அங்கு புதிதாக அமைக்கப்பட்ட ‘இருதய கதிரியக்க ஆய்வு கூடம்’ மற்றும் நவீன மருத்துவ இயந்திரங்கள் நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்பட்டன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போதே இந்த விசேட திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்றுக் காலை வருகை தந்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அங்கு நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட புதிய இருதய கதிரியக்க ஆய்வு கூடத்தை நாடா வெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். இதன் மூலம் வடக்கு மாகாணத்தில் இருதய நோய்களினால் பாதிக்கப்படும் நோயாளர்களுக்கு நவீன மற்றும் துரிதமான விசேட சிகிச்சைகளை இனிமேல் யாழ்ப்பாணத்திலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய சுமுகமான சூழல் உருவாகியுள்ளது. அத்துடன், வைத்தியசாலையின் தரம் மற்றும் சிகிச்சைத் திறனை மேம்படுத்தும் பொருட்டுப் பல மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன மருத்துவ இயந்திரங்களையும் அவர் இதன்போது வைத்தியசாலை நிர்வாகத்திடம் நேரில் கையளித்தார்.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வரலாற்றுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள விசேட அருங்காட்சியகத்தை அமைச்சர் பார்வையிட்டு அதன் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். மேலும், வைத்தியசாலையின் தற்போதைய ஆளணிப் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் குறித்தும் அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்துகொண்டார்.

அண்மையில் எதிர்பாராத விதமாகப் பாரிய தீ விபத்துக்குள்ளான யாழ். போதனா வைத்தியசாலையின் மருந்துத் தட்டுப்பாட்டு பிரதான களஞ்சியசாலையினையும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுச் சேத விவரங்களை ஆராய்ந்தனர்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சருடன் இணைந்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் இ.சந்திரசேகர், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகிய மக்கள் பிரதிநிதிகளும், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மற்றும் சிரேஷ்ட விசேட மருத்துவ நிபுணர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.